ஐபிஎல்-இல் அதிகச் சம்பளம் வாங்கிய முன்னணி வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான கிறிஸ் மோரிஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டாக விளையாடி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய கிறிஸ் இதுவரை 8 வருடங்களில் 69 போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் 774 ரன்களை குவித்த அவர் 94 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கிறிஸ் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தகவல் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் பல அணிகள் இவரை ஏலத்தில் எடுப்பதற்காகப் போட்டிப்போட்டன. இறுதியாக ராஜஸ்தான் அணி இவரை 16.5 கோடிக்கு ஏலம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த வருடமும் அதிக ஏலத்திற்கு எடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 81 ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிய கிறிஸ் மோரிஸ் 618 ரன்களைக் குவித்து 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் போது 11 போட்டிகளில் இவர் 15 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

தற்போது திடீர் ஓய்வை அறிவித்துள்ள கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உள்ளூர் அணியான டைட்டானிஸ் அணிக்கு பௌலிங் கோச்சாக பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.