நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Friday,August 27 2021] Sports News
நியூசிலாந்து அணியில் விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டதாக அவரது வழக்கறிஞர் ஆரோன் லாயட் தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள சிறந்த முதுகு தண்டு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் ஆல்ரவுண்டராக விளையாடிய கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும் இவரைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் எப்போதும் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு கான்பொராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதயப்பிரச்சனை காரணமாக பலமுறை அறுவைசிகிச்சை செய்துகொண்ட கிறிஸ் தற்போது மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிட்னி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு உயிர் காக்கும் கவசத்துடன் அளிக்கப்பட்ட சிகிச்சையில் கிறிஸ் உடல்நலம் தேறினார். இதனால் தற்போது உயிர்காக்கும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அணிந்துகொள்வதில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் தீவிரச் சிகிச்சையின்போது அவரது முதுகுத் தண்டில் ஸ்டோர்க் வந்ததாகவும் இதனால் அவருடைய கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டதாகவும் இதையடுத்து சிறந்த முதுகு தண்டு சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும் அவருடைய வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவருடைய உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ் கெய்ர்ன்ஸை குறித்த தகவல் வைரலானதை அடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் வருத்தம் வெளியிட்டு, விரைவில் அவர் குணமாக வேண்டும் என ஆறுதல் கூறிவருகின்றனர்.