கொரோனா இருக்கட்டும்.. பெங்களூரில் 6 பேருக்கு காலரா..!
- IndiaGlitz, [Monday,March 09 2020]
கொரோனாதான் உலகம் முழுவதும் மக்கள் அச்சப்படும் ஒரே விஷயம். இந்தியாவிலும் 41 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். ஆனால் திடீரென்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு காலரா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளதாக பெங்களூர் மருத்துவர்கள் கூறியுள்ளனர். நோய் மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவின் மூலம் மனிதர்களுக்கு காலரா நோய் ஏற்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் இந்த பாக்டீரியாவானது மனிதர்களின் உடலுக்குள் செல்லும் பின்னர் சிறுகுடலில் நச்சு நொதியை உற்பத்தி செய்யும். மேலும் கழிவுகள் மூலமாகவும் இது மற்ற மனிதருக்கு பரவும்.
தொடர் வயிற்றுப் போக்கு, தீவிர நீரிழப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இதனால் உடல் சோர்வு, அதிக தாக்கம் சரும வறட்சி, குறைந்த இரத்த அழுத்தம், உடலில் சோடியம், பொட்டாசியம் உப்புக்கள் குறைவது போன்றவை நிகழும் மருத்துவரை உடனடியாக அணுகவில்லை என்றால் நிலைமை மிக மோசமாகும்.
கொதிக்கவைத்த சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். உணவுகளில் ஈ மொய்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். சுகாதார முறையில் நன்கு சமைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் மேலும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.