சாக்லேட் வியாபாரியின் வங்கிக்கணக்கில் திடீரென டெபாசிட் ஆன ரூ.18 கோடி
- IndiaGlitz, [Tuesday,June 06 2017]
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. இதன் காரணமாக கருப்பு பணம் வைத்திருந்த பலர் பினாமி பெயர்களில் உள்ள பல வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்ததாக பல புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த கிஷோர் என்ற சாக்லேட் வியாபாரியின் வங்கிக்கணக்கில் கடந்த சில நாட்களில் ரூ.18,14,98,815 டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். கிஷோர் வங்கிக்கணக்கில் கடந்த சில மாதங்களில் மட்டுமே இவ்வளவு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டிருப்பதால் இதுகுறித்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அப்போது கிஷார், தனது வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை டெபாசிட் ஆனது குறித்து தனக்கு தெரியாது என்றும் இந்த பணப்பரிவர்த்தனைக்கும், தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வங்கியின் சிசிடிவி காட்சிகளை 10 நாட்களுக்குள் தரவேண்டும் என வருமான வரித்துறையினர் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.