சாக்லேட் பாய் நடிகர் மாதவன் பிறந்த தினம் இன்று...
Send us your feedback to audioarticles@vaarta.com
அலைபாயுதே படத்தின் மூலம் பெண்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகர் மாதவன் தமிழ் சினிமா உலகிற்கு சாக்லேட் பாயாகவே அறிமுகமானார். இந்த அறிமுகம் அவருடைய சினிமா வாழ்வில் ஒரு மிகப்பெரிய ஏற்றமாகவே இருந்தது எனலாம். இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எல்லாம் வந்த 2, 3 வருடங்களில் காலாவதி ஆகிவிடும் என்று விமர்சித்த அதே சினிமா உலகில் தனது 45 வயதிற்கும் மேலும் தனது மாறுபட்ட கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் காட்டி வரும் ஒரு நடிகராக தொடருகிறார் மாதவன்.
1970 ஜுன் 1 ஆம் தேதி ஜம்ஜட்பூரில் ஒரு தமிழ்க் குடும்பத்திற்கு மூத்த மகனாக பிறந்தார் இவர். எலக்ட்ரானிக் துறையில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். முதலில் அவரை ஈர்த்தத் துறை ஒளிப்பதிவுதான். பிரபல ஒளிப்பதிவளர் சந்தோஷ் சிவனுக்கு உதவியாக இருவர் படத்தில் மாதவன் பணியாற்றினார். அப்போது இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்திற்கு சந்தோஷ் சிவன் இவரைத்தான் அடையாளம் காட்டினார். ஆனால் இயக்குநர் மணிரத்தினம் இந்தக் கதாபாத்திரத்திற்கு மாதவன் வயது பத்தாது என நிராகரித்து இருக்கிறார்.
அடுத்து இவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் வலம் வர ஆரம்பித்தார். விளம்பரங்களிலும் தலைக் காட்டினார். 1990 களில் இவரின் சில தொலைக்காட்சித் தொடர்கள் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. அந்த வாய்ப்பை வைத்து இன்பர்லோ என்ற ஹாலிவுட் படத்தில் கோபமான காவல் துறை அதிகாரியாகவும் வலம் வந்தார். அதைத் தொடர்ந்து ஷாந்தி ஷாந்தி என்ற கன்னடப் படத்தில் தலைக் காட்டினார். பாலிவுட்டில் இருந்து ஒருவழியாக இவரது பயணம் தென்னிந்தியாவை வந்தடைந்தது. அந்தத் தருணத்தில் நடந்த ஒரு திருப்பம் நடிகர் மாதவனுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்லாம். நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருந்த அலைபாயுதே படத்தில் அவருடைய கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு மாதவனுக்குக் கொடுக்கப்பட்டது. இருவர் படத்தில் தட்டிப்போன வாய்ப்பை இயக்குநர் மணிரத்தினம் அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு வழங்கினார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புன்னகை மன்னன் ஜெய்சங்கருக்கு அடுத்து தமிழ் சினிமா உலகில் காதல் மன்னாக வலம் வர ஆரம்பித்தார் நடிகர் மாதவன்.
அன்றிலிருந்து இயக்குநர் மணிரத்தினத்தை தனது ஆஸ்தான குருவாகவே கருத ஆரம்பித்தார் மாதவன். அலைபாயுதே படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் இயக்குநர்களும் இவரை மொய்க்க ஆரம்பித்தனர். அடுத்து மின்னலே படத்தில் ஹாட் ஹிட்டைக் கொடுத்தார் மாதவன். அந்தப் படத்திலும் மேடி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொள்ள செய்தார். இடையிடையே சிறு சறுக்கல்கள் வந்தாலும் அவர் நடித்த படத்தின் பாடல்களே இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தன. சிரிப்பும் தனிப்பட்ட முறையிலான நடிப்பும் இள வட்டங்களின் மத்தியில் இவரை ஒருபோதும் மறக்க விடாமல் செய்திருந்தது. அடுத்தக் கட்டமாக ஆக்ஷன் கதாபாத்திரத்தையும் தொட ஆரம்பித்தார். பாலிவுட் பக்கமும் தலைக் காட்டினார்.
முதல் வெற்றிப்படமான மணிரத்தினம் கூட்டணி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் மீண்டும் கைக்கோர்த்தது. இதுவும் ஒரு மிகச்சிறந்த காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு தேர்ந்த எழுத்தாளர் கதாபாத்திரத்தின் மூலம் காட்சிக் கொடுத்தார் மாதவன். புன்னகை மன்னாக மட்டும் அல்ல தேர்ந்த கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்று தனது நடிப்பை நிரூபிக்கவும் செய்தார். கமெர்ஷியலாக மட்டும் அல்லாமல் அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
அடுத்து, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்த நேரத்தில் நடிகர் கமல்ஹாசனோடு சேர்ந்து இரண்டாவது கதாபாத்திரத்தில் கைக்கோர்க்கவும் செய்தார். இதற்கு முன்பு பல பாலிவுட் படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களோடு கைக்கோர்த்து நடித்து இருக்கிறார் என்றாலும் தமிழ் சினிமாவில் இது பிரமிப்பாகப் பேசப்பட்டது. அன்பே சிவம் படத்தில் நடிகர் கமல்ஹசானுக்கு சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதே கிடைக்கும் என எதிர்ப் பார்த்த நேரத்தில் அவருக்கு ஈடான நடிப்பைக் கொடுத்து நடிகர் மாதவன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அன்பே சிவம் படத்திற்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் இவருக்கு கிடைத்தது.
சாக்லேட் பாயாக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்தினம் ஆயுத எழுத்து படத்தில் வில்லனாகவும் நடிக்க வைத்தார். மொட்டைத் தலையோடு வித்தியாசனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. மாறுபட்ட கதாபாத்தில் வேறு ஒரு பரிணாமத்தை இவரால் எளிதாகக் கொடுக்க முடியும் என்பதையும் இந்தப் படத்தில் நிரூபித்தார். அடுத்து தமிழ்ச் சினிமாவைக் காலி செய்து விட்டு பாலிவுட் படங்களில் அமீர்கான் போன்ற முக்கியக் கதாபாத்திரங்களோடு கூட்டுச் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்த ரன்பே பசந்தி படம் இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகப் பேசப்பட்டது.
மீண்டும் தமிழுக்கு வந்த இவர் 2006 இல் தம்பி, இரண்டு என வித்தியாசமான நடிப்பின் மூலம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார். எவனோ ஒருவன் என்ற படத்தில் வசனகர்த்தாகவும் புது அவதாரம் எடுக்க ஆரம்பித்தார். அவர் இந்தியில் நடித்த 3 இடியட்ஸ் படம் இன்னொரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தப் படமாகவும் இவருக்கு அமைந்தது. ஹிந்தியில் இரண்டாவது கதாபாத்திரமாக இருந்தவந்த இவருக்கு தனு வெஸ்ட் மனு என்ற படத்தில் மூலம் கதாநாயகன் வேடமும் கிடைத்தது. ஆனால் அந்தப் படம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட ஒருபடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி கங்கனா ரனாவத்தையே சேரும் என பெருந்தன்மையாக மேடையில் கூறவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் வசூல் சுமார் 200 கோடியை தாண்டியிருக்கும் எனவும் பேசப்பட்டது.
இப்படித் தொடர்ந்து பாலிவுட்டில் செட்டிலாகிவிட்ட மேடியை எல்லோரும் மறந்தே இருப்பார்கள் என நினைத்த நேரத்தில் இறுதி சுற்று என்ற படத்தில் நான் இருக்கிறேன் என அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தினார். சாக்லேட் பாயாக பார்த்து வந்த தமிழ் சினிமா அவரை ஒரு பாக்சிங் கோட்சாக பார்க்க ஆரம்பித்தது. அடுத்து விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் இன்னொரு கூட்டணியை உருவாக்கினார். இவரது தேர்வு எப்போதும் தனிமனித வெற்றியை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல என்பதை இன்னொரு முறை நிரூபிக்கவும் செய்தார். நடிகர், வசனக் கர்த்தா என்ற கோணத்தில் பயணித்த இவர் இயக்குநர் அவதாரத்தையும் கடந்த 2019 ஆம் ஆண்டில் எடுத்து இருக்கிறார்.
ஜெமினி கணேசனுக்கு அடுத்து புன்னகை மன்னனாக தமிழ் சினிமா ஏற்றுக் கொண்ட ஒரு கதாபாத்திரம் நடிகர் மாதவன். ஒருபோதும் அதிலே தொடர்ந்து இருக்காமல் தனது புதுப்புது அவதாரத்தையும் பரிமாணத்தையும் மாற்றிக் கொண்டு வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி என்னென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பிடித்து தனது வசீகரப் புன்னகைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் மாதவன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com