நெஞ்சுல கை வச்சா உடனே ஹார்ட் அட்டாக்கா? 'கோப்ரா' இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!
- IndiaGlitz, [Tuesday,July 12 2022]
நடிகர் சியான் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று நடைபெற்ற ‘கோப்ரா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் தன்னைப் பற்றி பரவிய வதந்தி குறித்து கூலாக பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இந்த விழாவில் பேசியதாவது: சும்மா நெஞ்சில் கை வச்சாலே உடனே ஹார்ட் அட்டாக் என்று சொல்லிவிடுகிறார்கள். எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன். நான் மருத்துவமனையில் அட்மிட் ஆன போது ஊடகங்களில் என்னென்னவோ எழுதினார்கள். அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தேன். ஒரு சிலர் என்னுடைய முகத்தை மட்டும் மார்பிங் செய்து வேறு ஒரு நோயாளியின் முகத்தோடு வைத்து போட்டோஷாப் செய்து இருந்ததையும் நான் ரசித்தேன் என்று கூறினார்.
மேலும் நான் இருபது வயதில் விபத்தில் சிக்கியபோது எனது காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு விட்டேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எனது குடும்பத்தினரும் எனது ரசிகர்களும் எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது. நான் எப்போதும் சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமாதான் என்னுடைய உயிர் என்று கூறினார்.
மேலும் ’இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசைக்கு நானும் எனது மகன் துருவ்வும் மிகப்பெரிய ரசிகர்கள். நம்மீது நாமே மேல் நம்பிக்கை வைத்து கடுமையாக வேலை செய்தால் எவ்வளவு உயரத்திற்கும் போகலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரகுமான் தான். அவரைப் பார்த்த பிறகுதான் எனக்கு தேசிய விருது, ஆஸ்கர் விருது எல்லாம் வாங்க வேண்டுமென தோன்றியது. இந்த படத்திற்காக ஏழு மொழிகளில் டப்பிங் செய்கிறேன், எனக்கு இயக்குனர் விஜய் தான் மிகப் பெரிய தைரியம் கொடுத்தார்’ என்று கூறினார்.