சீயான் விக்ரமுடன் இணைந்த பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சியான் விக்ரமின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவருடைய அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 23வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பா ரஞ்சித் அவர்கள் தற்போது ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விக்ரம் தற்போது ’மஹான்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார் என்பதும் தற்போது அவர் ’கோப்ரா’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் பா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.