Download App

Chithiram Pesuthadi 2 Review

சித்திரம் பேசுதடி 2: கிரைம் திரில்லர் கதைகளின் தொகுப்பு 

மிஷ்கின் இயக்கிய முதல் படமான 'சித்திரம் பேசுதடி' படத்திற்கும் இந்த படத்திற்கும் டைட்டிலை தவிர வேறு எந்த கனெக்சனும் இல்லை. தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் ஒருவரால் ஒருசில பேருக்கு ஏற்படும் பிரச்சனையும், அந்த நபர் திருந்திவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் சுபமாகிவிடுவதும்தான் இந்த படத்தின் ஒருவரி கதை

கட்டப்பஞ்சாயத்து உள்பட பல முறைகேடான வழிகளில் பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர் ஒருவரை போட்டுத்தள்ள தனது எஜமானரால் அனுப்பப்பட்ட விதார்த், அவரை கொலை செய்ய விதார்த் முயற்சிக்கும்போது அந்த கொலை முயற்சியை நேரில் பார்த்ததால் காயத்ரியின் காதலை இழக்கும் நந்தன், நந்தனுடன் ஓடிப்போகும் முயற்சி தோல்வி அடைந்ததால் அப்பா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுக்கும் காயத்ரி, காயத்ரியின் திருமண செலவிற்காக ஒரு குற்றச்செயலில் இறங்கும் அவருடைய அப்பா, அவருக்கு உதவி செய்யும் போலீஸ்காரர் ஒருவர், அந்த போலீஸ்காரரின் மகளுக்கு ஆபரேசன் என்பதால் ஏற்படும் பணத்தேவை, தொழிலதிபரால் பாதிக்கப்பட்ட அஜ்மல் பணத்திற்காக தனியாக ஒரு குற்றச்செயலில் இறங்குவது, அவருக்கு உதவி செய்யும் அவரது காதலி, மேலும் இன்னொரு புறம் பாலியல் தொழில் செய்யும் பிரியா பானர்ஜி, சின்னச்சின்ன திருட்டுகள் செய்யும் திருடனை காதலிப்பது... இவர்கள் இருவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விதார்த்தால் தாக்கப்பட்ட தொழிலதிபரை கொலை செய்ய அவருடைய மனைவி ராதிகா ஆப்தே முயற்சி செய்வது, அவரது முயற்சிக்கு அந்த தொழிலதிபரின் பார்ட்னர் உதவி செய்வது .... யப்பா... இப்பவே கண்கட்டுதா? இந்த படத்தில் இன்னும் சில கேரக்டர்கள் பிரச்சனைகளுடன் உள்ளன. இந்த மொத்த பிரச்சனையையும் ஒரே ஒரு நபர் மனம் திருந்துவதால் முடிகிறது. அந்த நபர் யார்? யார் யாருக்கு என்ன பிரச்சனை? கடைசியில் மிஞ்சியவர்க்ள் எத்தனை பேர்? செத்தவர்கள் எத்தனை பேர்? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

விதார்த், காயத்ரி, அஜ்மல், ராதிகா ஆப்தே இந்த நான்கு நட்சத்திரங்களை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யார் எந்த கேரக்டரில் நடித்திருக்கின்றார்கள், யார் யாருக்கு என்ன பிரச்சனை என்பதை யோசிக்கும் முன்னரே, படம் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறது. அதிலும் சில கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பம் உச்சகட்டத்தை அடைகிறது. இருப்பினும் விதார்த், காயத்ரி இருவரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. ராதிகா ஆப்தேவின் உணர்ச்சிமிகுந்த ஒருசில காட்சிகளும் ஓகே ரகம்

சாஜன் மகாதேவ் இசையில் பிராவோ டான்ஸ் ஆடும் பாடல் மட்டும் ஓகே. வேட்டி கட்டி கொண்டு பிராவோ டான்ஸ் ஆடும்போது தியேட்டரில் விசில் பறந்திருக்க வேண்டும். ஆனால் தியேட்டரில் பத்து பேர் மட்டுமே இருந்ததால் ஆழ்ந்த அமைதி

பெரும்பாலான இருட்டு காட்சிகளிலும் பத்மேஷின் ஒளிப்பதிவில் தெளிவு உள்ளது. எடிட்டர் வெங்கட்ரமணன் வேற லெவல் எடிட்டிங். படம் பார்த்து அது என்ன லெவல் என்பதை புரிந்து கொள்ளவும்

ஒரு படத்தில் ஒரிரு கிளைக்கதைகள் இருந்தாலே தலை சுற்றும். இந்த படத்தில் சுமார் பத்து கிளைக்கதைகள். இடைவேளை வரை இயக்குனர் ராஜன் மாதேவ் என்ன கதை சொல்ல வருகிறார் என்று சத்தியமாக புரியவில்லை. இரண்டாம் பாதியிலும் திரைக்கதையில் மேலும் பல முடிச்சுகளை போட்டு கடைசி பத்து நிமிடங்களில் அனைத்து முடிச்சையையும் அவிழ்க்கும் திறமையான திரைக்கதை. ஆனால் எத்தனை பேர்களுக்கு இந்த படம் புரியும் என்பதுதான் கேள்விக்குறி. கிளைக்கதைகளை கொஞ்சம் குறைத்து, அனைவருக்கும் புரியும்படியான காட்சிகளுடன் இந்த கதையை படமாக்கியிருந்தால் ஒரு பெஸ்ட் படமாக இருந்திருக்கும். இருப்பினும் இயக்குனரின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Rating : 2.5 / 5.0