சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Thursday,July 27 2017]
இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடிய, ஆறு தேசிய விருதுகளும் ஏழு பிலிம்பேர் விருதுகளும் பெற்ற சின்னக்குயில் சித்ரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த இசைக்குயிலுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சிங்களம், ஆங்கிலம், லத்தீன் உள்பட பல மொழிகளில் சுமார் 25000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் சித்ரா. இந்தியாவில் இவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு இவர் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்தான். குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாதது.
கடந்த 1985ஆம் ஆண்டு 'நீதானா அந்த குயில்' படத்திற்காக இசைஞானியின் இசையில் உருவான 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் தான் தமிழில் சித்ரா பாடிய முதல் பாடல். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகியது. இதனையடுத்து 'பூவே பூச்சூடவா' படத்தில் சித்ரா பாடிய 'சின்னக்குயில்' பாடலுக்கு பின்னர்தான் அவர் சின்னக்குயில் சித்ரா' என்று அழைக்கப்பட்டார். மேலும் கே.பாலசந்தர் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் உருவான 'சிந்து பைரவி' படத்திற்காக இவர் பாடிய 'பாடறியேன் படிப்பறியேன்' பாடலுக்காக சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அதன் பின்னர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற 'மானாமதுரை' பாடலுக்கும், ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்கும் சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் தென்னிந்தியாவின் நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே திரை இசைக்கலைஞர் சித்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகி என்ற பெருமை சித்ராவுக்கு உண்டு. சித்ராவிடம் உள்ள இனிமையான மனித நேயத்தை இதுவரை நான் யாரிடமும் பார்த்ததில்லை என்றும் அவர் ஒரு பாடலை பாட அதிகபட்சமாக பத்து நிமிடங்கள் மட்டுமேஎடுத்து கொள்ளும் இசைஞானம் உள்ளவர் என்றும் ரஹ்மான் புகழ்ந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பாடல்கள் வரை பாடும் திறமை மிக்கவர் சித்ரா என்று ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சித்ராவின் இசை சேவைக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னக்குயில் சித்ரா இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி, பல விருதுகளை வென்று குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறோம்