காதலனுக்காக ரூ.5 கோடிக்கு சூனியம்? அலுவலகத்தில் திருடி வசமாக சிக்கிய இளம்பெண்…!

  • IndiaGlitz, [Wednesday,July 26 2023]

சீனாவில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலருடன் வலுவான உறவை மேம்படுத்துவதற்காகவும் இருவருக்கும் இடையே உள்ள சிக்கலை தீர்ப்பதற்காகவும் பிளாக் மேஜிக் எனப்படும் சூனியத்தை நம்பியுள்ளார். இதைச் செய்வதற்காக அவர் வேலை பார்க்கும் இடத்தில் ரூ.5 கோடியை திருடியதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு சீனாவின் லியோனிஸ் எனும் பகுதியில் வசித்துவரும் இளம்பெண் வாங். இவர் புத்தக நிறுவனம் ஒன்றில் கடந்த 2018 முதல் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய காதலருக்கும் தனக்கும் இடையே மன நெருக்கத்தை ஏற்படுத்தவும் உறவை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சித்து இருக்கிறார். இதனால் ஏற்கனவே ஜாதகம், வசியம் மற்றும் பிளாக் மேஜிக் எனப் பல விஷயங்களில் நம்பிக்கை கொண்ட அவர் சூனியம் வைக்க நினைத்திருக்கிறார்.

இதையடுத்து கடந்த 2018 மார்ச் மாதம் முதல் தான் வேலைப்பார்த்து வரும் புத்தக நிறுவனத்தில் சிறுக சிறுக பணத்தை திருட ஆரம்பித்துள்ளார். இதை வைத்து ஆடம்பர பைக்குகள், டிசைனர் பேக்குகள் மற்றும் துணிகளை வாங்கி குவித்த அவர் ஆன்லைனில் ஜோதிடம் பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நம்பிக்கை எல்லை மீறிய நிலையில் தன்னுடைய காதலுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்பிய வாங் ஒரு ஆன்மீக குருவை நாடியிருக்கிறார். அந்த ஆன்மீக குரு இன்னொரு எஜமானாரிடம் அழைத்துச் சென்ற நிலையில் அவர் பிளாக் மேஜிக் செய்திருக்கிறார். இதற்காக வாங் கிட்டத்தட்ட 3.89 மில்லியன் யுவான் செலவிட்டதாகவும் ஒட்டுமொத்தமாக 400,000 யுவான்கள் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018 மார்ச் மாதத்தில் துவங்கிய இந்தத் திருட்டை வாங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரைக்கும் தொடர்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 4.8 மில்லியன் யுவான்களை வாங் திருடியதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.5,54,21,589. நீண்ட காலமாக இதையறியாத கடை முதலாளி ஒருகட்டத்தில் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் வாங் செய்த திருட்டு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதனால் வாங் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் தனது காதலரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சூனியம் செய்து மாட்டிக்கொண்ட வாங்கின் காதலர் இன்னும் முன்பைவிட நெருக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய நம்பிக்கை ஜெயித்துவிட்டது எனக் கூறும் வாங் கைது நடவடிக்கையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காதலுக்காக வசியம் செய்யப்போய் திருட்டுச் சம்பவத்தில் மாட்டிக்கொண்ட வாங்கிற்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.