இறைச்சி பிரியர்களின் ஆசையில் மண்ணைபோட்ட சீன அரசின் அதிரடி உத்தரவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வௌவால்களில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் எறும்புத் திண்ணிகளுக்கு பரவி பின்பு அதன் மூலம் மனிதர்களுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. முதலில் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் ஆற்றலை இது பெற்றிருக்கவில்லை என்றும் மனிதர்களுக்கு பரவியோ அல்லது எறும்புத் திண்ணிகளிடம் இருக்கும்போதோ மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே உலகம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பு அனைத்து உலக நாடுகளையும் வலியுறுத்தியது. சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இறைச்சி கடைகளில் சில விதிமுறைகள் போடப்பட்டன. ஆனாலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
தற்போது சீன அதிபர் ஜி ஜிங்பிங் அந்நாட்டில் எறும்புத் திண்ணிகளை (பாங்கோலின்) உண்பதற்குத் தடை விதித்து இருக்கிறார். இந்த வகை உணவுகளை உட்கொண்டால் கடும் குற்றமாக கருதப்படும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அழிந்து வரும் பாண்டா கரடிகளைப் போன்று இந்த விலங்கினத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீனாவில் எறும்பு திண்ணி உணவு வகைகளுக்கு கடும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தடைச் செய்யப்பட்ட முதலை, வௌவால், ஆமை போன்ற உணவுகளையும் சீனர்கள் விரும்பி உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சீனாவில் இந்த வகை உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கள்ளச் சந்தைகளில் இவை தாராளமாக விற்கப்படுகின்றன. இப்படி கள்ளச் சந்தைகளில் வைத்து விற்கும்போது அங்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதால்தான் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் போன்ற கொடிய ஆபத்துகளை நாம் சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில் கள்ளச் சந்தைகள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அந்நாட்டில் வைக்கப்பட்டது. அதையொட்டி அதிபர் ஜி ஜிங்பிங் சில விலங்குகளின் உணவுகளுக்கு கடும் தடை விதித்து இருக்கிறார். சீனர்கள் பாரம்பாரிய மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எறும்புத்திண்ணி எனப்படும் பாங்கோலின் இறைச்சி அதிக மருத்துவக் குணம் கொண்டது என சீனர்கள் நம்புகின்றனர். இதனால் சீனாவில் எறும்பு திண்ணிகள் அதிகளவு வேட்டையாடப் படுகிறது. கடந்த 10 வருடத்தில் மட்டும் 1 மில்லியன் எறும்புத் திண்ணிகள் வேட்டையாடப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச சந்தையில் இருந்து கள்ளத் தனமாகவும் சீனாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் ஒரு வருடத்திற்கு 20 டன் அளவிற்கு எறும்புத் திண்ணிகள் கடத்தப்படுவதாக விலங்கு வர்த்தக கண்காணிப்பு வலையமைப்பு தகவல் தெரிவிக்கிறது.
சீனர்கள் அதிகளவு எறும்புத்திண்ணிகளை விரும்புவதால் தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யாங்சே ஆற்றங்கரைக்கு தெற்கே உள்ள 17 மாகாணங்களில் எறும்புத்திண்ணிகள் உயிர் வாழ்வதாகவும் தரவுகள் கூறுகின்றன. 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி எறும்புத்திண்ணிகளின் வாழும் இடம் 11 மாகாணமாக குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2007 இந்த விலங்கினத்தை வேட்டையாடுவதற்கும் சீன அரசு தடைவித்தது. 2018 முதல் சர்வதேச சந்தையில் இருந்து இறக்குமதி செய்வதையும் அந்த அரசு தடைவிதித்தது. ஆனால் கடும் குற்றமாக அறிவிக்கப்படாத நிலையில் தொடர்ந்து எறும்புத் திண்ணிகள் வேட்டையாடப் பட்டே வருகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக தற்போது சீன அதிபர் எறும்புத் திண்ணிகளை வேட்டையாடுவது உண்பது போன்றவை கடும் குற்றமாக அறிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout