கொரோனா பரவல்: தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு சீனாவின் வுஹான் ஆய்வகம் விளக்கம்!!!
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. இதில் “சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பியிருந்தால் விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டிவரும்” என அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பார்க்கப்பட்டது.
அதிபரின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக செய்தி வெளியிட்டது. மேலும், அங்குப் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அவர் மூலமாக அவரது காதலியும் நோய்த்தொற்றுக்கு ஆளாகினார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட நபரின் காதலி சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சிக் கூடத்திற்கு சென்றபோது மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியது என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.
இச்செய்தி வெளியானவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பியிருந்தால் விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டிவரும்” என்று கடும் எச்சரிக்கை விடுத்ததோடு இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதைத் தவிர நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானதுதான் என்று நேற்று கருத்து தெரிவித்து இருந்தார். எய்ட்ஸ் வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி சோதனையில் வுஹான் ஆய்வகம் ஈடுபட்டது. இந்த ஆய்வில் புதிய கொரோனா வைரஸ் கசிந்தது என்றும் மருத்துவர் லூக் குறிப்பிட்டுள்ளார். புதிய கொரோனா வைரஸில் எய்ட்ஸ் வைரஸ்க்கான கூறுகள் மற்றும் மலேரியா வைரஸ்க்கான கூறுகள் இருப்பதற்கு சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்தார்.
ஆனால் சீனா வெளியிட்ட கொரோனா மாதிரியை வைத்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் Scripps Research Institute புதிய கொரோனா வைரஸ் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதல்ல, இயற்கையாக பரிணமித்தது என முடிவு வெளியிட்டது. மற்ற கொரோனா வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் ஆற்றல் குறைந்தவை என்றும் இது வௌவால்களில் நோய் ஏற்படுத்தும் வைரஸ் என்றும் தெரிவித்து இருந்தது. மேலும் எறும்புதிண்ணியிடம் இதே போல நோய் ஏற்படுத்தும் வைரஸ் இருப்பதாகவும் தெரிவித்தது. விலங்குகளிடம் இருந்து நேரடியாக நோயை ஏற்படுத்தாமல் முதலில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி நோயை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவையாக மாறியிருக்கலாம் எனத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கருத்துக்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மேற்கத்திய நாடுகள், இன்னும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே வெளியானது என விமர்சித்து வருகிறது. மேலும், சீனா வைரஸ் பற்றிய ஆய்வு செய்யும் தனது திறனை வெளிப்படுத்த பல ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் அந்த ஆய்வுகளில் இருந்தே கொரோனா பரவியதாகவும் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்தார். அடுத்ததாக சீனா கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக உலகச் சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது எனவே அமைப்புக்கு வழங்கிவரும் நிதி நிறுத்தப்படும் எனவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
தற்போது, கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது என்பது குறித்த விவாதங்கள் நாடுகளுக்கிடையிலான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் மூத்த அதிகாரி யுவான் ஜிமிங் இன்று சீன ஊடக செய்தியாளர்களை பேசினார். அதில் “கொரோனா வைரஸ் வுஹானின் ஆய்வுக்கூடத்தில் இருந்து பரவியது என்று சொல்வதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையிலே தவறானது” என விளக்கம் அளித்திருக்கிறார்.