பொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்! பரபரப்பு சம்பவம்!
- IndiaGlitz, [Tuesday,January 19 2021]
கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் பல மாதங்களைக் கடந்து மீண்டும் சில நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. காரணம் அங்கு மீண்டும் சில மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி இருக்கிறது. இதனால் ஹுபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மக்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.
இப்படி இருக்கும்போது ஹுபேயில் இருந்து ஒரு விற்பனையாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜிலின் மாகாணத்திற்கு சென்று இருக்கிறார். அவர் ஜிலினில் உள்ள பல இடங்களுக்குச் சென்று அங்கு நூற்றுக் கணக்கானோரை சந்தித்து தன்னுடைய நிறுவனப் பொருட்களைக் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். இதனால் ஜிலின் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களில் 109 பேருக்கு அறிகுறியே இல்லாத கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸின் தொடர்பை குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த விற்பனையாளருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனால் தற்போது ஜிலின் உள்ள 2 நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்நகரில் உள்ள 1 கோடியே 25 லட்சம் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நகரங்களைத் தவிர சீனாவில் மேலும் 1 கோடியே 90 லட்சம் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.