செயற்கையாக ஒரு சூரியனையே உருவாக்கிக் கொண்டிருக்கும் சீனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாம் இப்போது அணு உலைகளில் `அணுக்கரு பிளவு' என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். அந்த ஆற்றலைப் பயன்படுத்திதான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்த செயல்முறையின்போது அதிக அளவிலான கதிர் வீச்சும் வெளிப்படும்.
இதற்கு நேர் எதிர் செயல்முறைதான் `அணுக்கரு இணைவு.' இதன் செயல்முறையில் இரு சிறு அணுக்கள் ஒரே அணுவாக இணைக்கப்படும். இந்த முறையில் இரு நன்மைகள் உண்டு. ஒன்று இதிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின்போது வெளிப்படும் ஆற்றலைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக் கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது. சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய சூரியன் இயங்குவது இந்த முறையில்தான்.
``HL-2M Tokomak எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கை சூரியனைத் தயாரிக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும்" என அறிவித்திருந்தது சீனாவின் National Nuclear Corporation. சமீபத்தில் அந்தக் கருவியை வடிவமைப்பதில் பங்கு பெற்றிருக்கும் விஞ்ஞானி துவான் சுரு அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``கருவியில் Coil system பொருத்தும் பணி நிறைவு பெற்றிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். அதன்படி சீனாவின் இந்தத் திட்டம் 2020-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தக் கருவியைப் பற்றி அவர் கூறும்போது, ``இந்தக் கருவியின் மூலம் 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்துடன் ப்ளாஸ்மாவை உற்பத்தி செய்ய முடியும். அதற்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவு எரிபொருளை உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.
இன்னும் அந்தச் சாதனத்தைப் பற்றிய தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை. சீனாவின் இந்தச் சாதனம் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும் அறிவியலின் அடுத்தகட்டத்துக்கு இந்தத் திட்டம் ஒரு படியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments