புதுக்கூட்டணி அமைக்கும் சீனா!!! அண்டை நாட்டுக்கு அதிநவீனப் போர்க்கப்பலை விற்றதாகப் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

 

சீனா சமீபக்காலமாக உலக நாடுகளின் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் பலகட்ட பேச்சு வார்த்தைக்குப்பின் தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டாலும் இந்திய எல்லையில் உள்ள இராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் கப்பற்படையை வலுப்படுத்தும் வகையில் சீனா 4 அதிநவீனப் போர்க் கப்பல்களைத் தயார் செய்து விற்பனை செய்யவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு பல வகைகளில் தொடர்ந்து உதவிசெய்யும் சீனா தற்போது அதிநவீன போர்க் கப்பல்களை உற்பத்தி செய்யவும் முன்வந்திருக்கிறது. இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான், சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனம் சீனாவின் டைப் 054 ரகப் போர்க் கப்பல்களை வாங்க விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சீனா தயாரித்த அதிநவீனப் போர்க் கப்பல்களில் ஒன்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் கடந்த 21 ஆம் தேதி பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி யைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதிநவீனப் போர்க்கப்பலின் இறுதிக்கட்ட வேலை முடிவுற்ற நிலையில் ஷாங்காய் நகரில் உள்ள ஹுடாங் ஸோன்குவா கப்பல் தளத்தில் நேற்று முன்தினம் அதன் தொடக்க விழாவும் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இருநாட்டு இராணுவ உறவில் புதிய அத்தியாயம் துவங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.