உருமாறிய புது பறவைக் காய்ச்சலால் பாதிப்பு… தொடரும் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Tuesday,June 01 2021]
சீனாவில் உருமாறிய புது பறவைக் காய்ச்சல் வைரஸால் முதல் முறையாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சீனாவில் இதேபோன்று பல பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் உருமாறிய வைரஸ் ஒன்று பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது குறித்து விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
பறவைக்காய்ச்சல் வைரஸ்களில் H5N1 எனப்படும் ஒரு வைரஸ் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹாங்காங்கில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர் பல வைரஸ்கள் மனிதர்களுக்கு பாதிப்பை கொடுத்த நிலையில் சீனாவில் கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கு இடையில் H7N9 எனும் வைரஸ் 300 க்கு மேற்பட்ட மனிதர்களை காவு வாங்கியது. அதைத் தொடர்ந்து சீனாவில் வேறு எந்த பறவைக் காய்ச்சல் வகைகளும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவில் H5N8 எனும் பறவைக் காய்ச்சல் வகை ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது சீனாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய பறவைக் காய்ச்சல் வைரஸ் H10N3 ஒன்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டின் ஜியாங்ஸு நகரில் 41 வயதான ஒருவருக்கு இந்தப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே 28 ஆம் தேதி அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அவருடன் தொடர்புடைய மற்றவர்களை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
அதோடு புதிய வகை பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள், பரவும் தன்மை குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.