கொரோனா வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு மறுக்கிறதா சீனா??? நடப்பது என்ன???
- IndiaGlitz, [Saturday,April 25 2020]
தற்போது உலக நாடுகள் கொரோனா பரவல் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு சீனா ஒத்துழைக்க மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பற்றி சீனா உலக நாடுகளுக்குத் தவறான தகவல்களைப் பரப்பியதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியங்கள் “அருகில் உள்ள நாடுகளை குறிவைத்து நடத்தப்பட்ட சதியே கொரோனா வைரஸ், சீனா இந்த விஷயத்தில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளது” எனக் குற்றம் சாட்டியிருக்கின்றன. மேலும், சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தி இருந்தன.
கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்த தனது அதிகாரிகளை சீனாவிற்கு அனுப்ப உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். மேலும், சீனாவிற்கு ஆதரவாக WHO செயல்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த விவகாரம் குறித்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள WHO வின் வருடாந்திர கூட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இதைத் தவிர பல நாடுகள் சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரைப் போன்றே உலகில் பல மேற்கத்திய நாடுகளின் அதிபர்கள் சீனாவின் நடத்தைக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.
சீனா, கடந்த வாரத்தில் கொரோனா பலி எண்ணிக்கையை 50% ஆக அதிகரித்து அதிகாரப்பூர்வமாகச் செய்திகள் வெளியிட்டது. அதற்கு பின்னர்தான் உலக நாடுகளின் பல தலைவர்கள் சீனா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதற்கு, கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் வுஹான் மாகாணத்தில் கடுமையான குழப்பங்கள் நிலவின எனவும் பலர் வீடுகளிலேயே நோய்ப் பாதிப்பால் உயிரிழந்தனர் எனவும் அவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டே தற்போது பலி எண்ணிக்கையை அதிகரித்து வெளியிட்டதாகவும் சீன அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டனுக்கான சீனாவின் தூதர் சென் வென். தற்போது சீனா கொரோனா பரவலுக்கு எதிராக போராடி வருகிறது. இந்நேரத்தில் விசாரணை நடத்தப்படுமானால் அது சீனாவின் கவனத்தைத் திசைத் திருப்பிவிடும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், “இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நாங்கள் வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வருகிறோம். தற்போது விசாரணை ஏன் நடத்தப்பட வேண்டும்? இதனால் எங்கள் கவனம் திசை திருப்பப்படும். விசாரணையில் எந்த பலனும் இல்லை” எனவும் சென் வென் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொண்டால் அதை எதிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் எனக் கருத்துக் கூறி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.