நிலாவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பி பூமிக்குக் கற்களைக் கொண்டுவரும் முயற்சி!!!
- IndiaGlitz, [Monday,November 23 2020]
நிலாவில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகள் மட்டும் தொடர்ந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாசா உறுதிப்படுத்தியது. இதற்கு முன்னதாகவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டாலும் அது உறைந்த பாறைகளில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நிலவின் தென்துருவப் பகுதியின் மேற்பரப்பிலேயே தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை நாசா உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து சீனா தனது புது முயற்சியாக ஆளில்லாத விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கிருந்து கற்களை பூமிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டபோது சிறிதளவு பாறை மற்றும் மணலை அங்கு இருந்து கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதேபோல 1976 இல் ரஷ்யா ஆளில்லாத விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி 170 கிராம் அளவுள்ள பாறையைப் பூமிக்குக்கொண்டு வந்து ஆய்வை மேற்கொண்டது.
அந்த வரிசையில் தற்போது 3 ஆவதாக சீனாவும் ஒரு பெரிய ராக்கெட் மூலம் சேலஞ்-5 எனும் ஆளில்லா விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி அங்கிருந்து 2 கிலோ அளவுள்ள பாறைகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்கான ஏற்பாட்டில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலவின் ஓடிஷன் ஆப் ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து இந்தப் பாறைகளை சேகரித்து வர முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நிலவில் இயங்கும் எரிமலைகள் மற்றும் சூரியனில் வீசும் கதிர்வீச்சில் இருந்து காக்கும் காந்த அலை எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.