மாஸ்க்கினால் உண்டான வடுக்கள்.. அசராமல் மக்கள் பணியாற்றும் சீன செவிலியர்கள்..! #Coronovirus
- IndiaGlitz, [Saturday,February 08 2020]
'கொரோனா வைரஸ்’ இந்தப் பெயர் சீனாவை மட்டுமல்ல உலக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன ஊடகங்கள் காரோண வைரசிலிருந்து மக்களை காக்க போராடும் செவிலியர்கள் மருத்துவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வுகான் நகரம் மருத்துவத் துறைக்குப் பெயர் போன நகரம். மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என நிரம்பியிருக்கும் இந்த மாகாணத்திலிருந்துதான் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது.
ஜனவரி மாதத்தில் இந்த நோய் மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு பின்னர்தான் உணர்ந்துகொண்டது. ஆனால், அதற்குள் கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. இது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ அதே கொரோனா வைரஸ் தாக்கத்தால் இரண்டு நாட்கள் முன்னர் மரணமடைந்தார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர். முகத்தில் அணிந்திருக்கும் 'மாஸ்க்’ செவிலியர்களுக்குக் கடுமையான வடுக்களை ஏற்படுத்துகின்றது. நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் இதுபோன்ற வடுக்கள் ஏற்படுகின்றன. அந்தக் காயத்துக்கு பிளாஸ்திரிகளைப் போட்டுக்கொண்டு மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்ந்து வருகின்றனர் செவிலியர்கள். இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.