மீண்டும் தலையெடுத்த கொரோனா… உயிருடன் இருந்தவரை புதைக்க முயன்ற சோகம்!
- IndiaGlitz, [Tuesday,May 03 2022]
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட உலகநாடுகள், சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டன. இந்நிலையில் மீண்டும் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நோய்ப்பாதிப்புகள் கண்டறியப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். இந்நிலையில் புட்டுவோ மாவட்டம் ஜின்செங்செங் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஜின்செங்செங் பகுதியில் 100 நபர்களுடன் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் வசித்துவந்த முதியவர் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்து விட்டார் எனக்கூறி மருத்துவத்துறை ஊழியர்கள் அவரை பாலித்தீன் பையில் வைத்து அடைத்து பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிணவறையில் வேலைப்பார்த்து வந்த 2 ஊழியர்களில் ஒருவர் கவரைத் திறந்துபார்த்து விட்டு, முதியவர் இன்னும் இறக்கவில்லை, இதயத்துடிப்பு இருக்கிறது எனும் தகவலை அருகில் இருந்தவரிடம் கூறினார். ஆனாலும் அதை அலட்சியப்படுத்திய மற்றொரு ஊழியர் முதியவரை உயிருடன் இருக்கும்போதே புதைக்க முயற்சிக்கிறார்.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் பலரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த முதியவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ஷாங்காய் நகர மக்களுக்கு இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.