USஇல் கடந்த 2019 ஆம் ஆண்டே கொரோனா பாதிப்பு இருந்தது? வெளியான பகீர் தகவல்!
- IndiaGlitz, [Friday,June 18 2021]
கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டே அமெரிக்காவின் 5 முக்கிய மாகாணங்களில் 7 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவை சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் ஜெங் குவாங் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் கொரோனா வைரஸின் தோற்றத்தைக் குறித்து முதலில் அமெரிக்காவில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜெங் வலியுறுத்தி இருப்பது தற்போது உலக அளவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் வைரலாஜி நிறுவனத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தை அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் முன்வைத்தன. இதையடுத்து கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து தற்போது உலகச் சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் வைரலாஜி நிறுவனத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியானது என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கடந்த மாதம் முதல் செய்தி வெளியிட்டு வந்தன. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து 90 நாட்களில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டின் உளவுத்துறைக்கு கட்டளை இட்டுள்ளார். அந்த அடிப்படையில் தற்போது அமெரிக்க புலானாய்வு அதிகாரிகள் சீனாவின் வைரலாஜி நிறுவனத்தின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் தொற்றுநோயியல் துறை நிபுணரும் அந்நாட்டின் நோய்த்தடுப்பு தலைவருமான ஜெங் குவாங் கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டே இருந்துள்ளது. இதுகுறித்த ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸின் தோற்றம் குறித்து முதலில் அமெரிக்காவில்தான் விசாரணை செய்ய வேண்டும் எனவும் புது சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.