கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்… துணை பிரதமர் மீது பிரபல வீராங்கனை குற்றச்சாட்டு!
- IndiaGlitz, [Friday,November 05 2021]
சீனாவின் முன்னாள் துணை பிரதமர் சாங் காவோலி தன்னை கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொண்டதாக அந்நாட்டின் பிரபல முன்னாள் டென்னீஸ் வீராங்கனை பெங் ஷுவாய் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து அந்நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய். இவர் சீனாவின் துணை பிரதமாராக இருந்த சாங் காவோலி, தியான்ஜினில் இருந்தபோது விருந்திற்கு தன்னை அழைத்துப் பின்பு கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்திற்கு தன்னிடம் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தால் நான் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானேன். தற்போது அதைப்பற்றி பொதுவெளியில் பேச விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Weibo எனும் சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்தச் செய்தி பதிவுசெய்யப்பட்ட சில மணிநேரங்களில் நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீன மக்கள் அந்தப் பதிவை டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதால் தற்போது நாடு முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அந்நாட்டில் பொதுவெளிக்கு வந்ததேயில்லை என்று சொல்லப்படுகிறது.
ஜி ஜின்பிங் ஆட்சியில் கடந்த 2012- 17 வரை இருந்த பொலிட்பிட்ரோ உயர்மட்டக் குழுவில் ஒருவராக இருந்தவர்தான் சாங் காவோலி. இவர் அந்நாட்டின் 7 ஆவது பெரிய சக்தியாக இருந்துள்ளார். பின்பு கடந்த 2013-2018 வரை அந்நாட்டின் துணைபிரதமராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்பு அந்நாட்டின் தலைவர்கள் பலர் சாதாரண மனிதர்களாக ஆகிவிடும் நிலையில் சாங் காவோலியை இதுவரை எந்தப் பத்திரிக்கையும் அணுக முடியவில்லை என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சாங் காவோலி மீது டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் சுமத்தியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதே பலரின் ஆவலாக மாறியிருக்கிறது.