அமெரிக்க – சீனா இடையே வர்த்தகப் போர்??? இந்தியப் பொருளாதாரத்தினைப் பாதிக்குமா?

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

பிப் 1 - மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தையே பாதித்து உள்ளது என்ற ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். உலகப் பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட சிறிய சரிவு, இந்தியப் பொருளாதாரத்திலும்  தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற ரீதியிலான பொருளில் தான் அந்தக் கருத்தினை நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் வர்த்தகப் போர் தொடர்பான விவாதங்கள் பொருளாதார வல்லுநர் மத்தியில் நடத்தப் பட்டன. இந்தியாவின் மந்தமான பொருளாதார சூழலுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது

முன்னதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த வர்த்தகப் போரை இந்தியா திறமையாகப் பயன்படுத்திக் கொண்டால் நாட்டின் பொருளதாரம் உயரும் என்றும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்தியா இந்த வர்த்தகப் போரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதென்ன அமெரிக்க – சீனா இடையே வர்த்தகப் போர்? எப்படி இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற கோணத்தில் ஒரு சிறு விளக்கம் :

உலக  அளவில் வலிமையான பொருளாதார மையமாக சீனாவும் அமெரிக்காவும் திகழ்ந்து வருகிறது. அதே போல தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தொழில் மையமாக இந்தியா உலக அளவில் முக்கியத்துவம் உடைய நாடாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வரி விதிப்பு விகிதங்கள்

அமெரிக்காவில் சீனப் பொருட்களுக்கு 2.5% வரி விதிப்பு முறை கடைப்பிடிக்கப் பட்டது. ஆனால் சீனாவில் அமெரிக்கப் பொருட்கள் 10% வரி கொடுத்துத் தான் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய சூழல் நிலவி வந்தது. உலக அளவில் இந்த வரி விகிதம் அதிகமானது எனக் கருதப்பட்டது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்தே சீனாவில் அமெரிக்கப் பொருட்களின் வரி விகிதம் அதிகமாக இருப்பதைக் கண்டித்து குரல் கொடுத்து வந்தார். சீனா இந்த வரி விகிதத்தைக் குறைத்து கொள்ள வேண்டும் எனவும் இது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

அமெரிக்காவின் கோரிக்கையை சீனா ஏற்றுக்கொள்ளாத நிலையில் சீனப் பொருட்களுக்கு 10 % வரி விகிதத்தை அதிகப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அதிபர் டிரம்ப். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 360 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின் மீது 25% வரியை அதிகரித்து வெளியிட்டது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதில் கொடுக்கும் விதமாக  60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள மீது 5% லிருந்து  25 % வரி விதிப்பினை அதிகப்படுத்தியது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு நிலைமைகளில் பெரும் போரையே இந்த நடவடிக்கைகள் தொடங்கி வைத்தன. மேலும் அமெரிக்காவில்  பெரும்பாலான நிறுவனங்கள் மூலதனப் பொருட்களுக்கு சீன சந்தையை மட்டுமே நாடி இருந்த நிலையில் இந்த வரிவிதிப்பு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

2018 அளவை விட 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி 1.1% குறைந்து காணப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அமெரிக்காவின் பல நிறுவனங்கள் மாற்றுச் சந்தையை தேடிச் சென்று விட்டன. இரு நாடுகளின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலையை உருவாகி இருக்கிறது. சீனாவின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது.

சீனா  பல தொழில்நுட்பங்களின் கூடாரமாக இருக்கும்பட்சத்தில் பொருட்களின் தேக்க நிலையை சந்திக்க விரும்பாமல் மற்ற நாடுகளுக்குத் தனது உயர் தரமான தயாரிப்புகளை அனுப்பி வைக்கும். இதனால் இந்தியா போன்ற தொழில் முனையும் நாடுகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று பொருளாதார மட்டத்தில் நம்பப் பட்டது. ஆனால் எதிர்ப் பார்த்த அளவுக்கு இந்த வேலைகள் நடக்கவில்லை. சீனாவின் பொருளாதார ஏற்றுமதியில் சிறு சுணக்கம் காணப்பட்டாலும் தனது தயாரிப்புகளை குறைந்த விலைக்கு விற்கும் நடவடிக்கையிலோ அல்லது பொருட்களின் உற்பத்தியை குறைக்கும் நடிவடிக்கையிலோ அது ஈடுபட வில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரினால் மூலதனப் பொருட்களின் நெருக்கடி ஏற்படும் என்றும் பல நிறுவனங்கள் தங்களது பொருள் உற்பத்தியை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்ற சூழல் தற்போது காணப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா வரி விகிதம்

உலகில் வளரும் நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா தனது ஏற்றுமதி பொருட்களின் மீது அமெரிக்காவிற்கு அதிகப்படியான வரியினை விதிப்பதாக அதிபர் டிரம்ப் இரண்டு ஆண்டுகளாகக் கடும் குற்றம் சாட்டி வந்தார். இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கான வரிகள் “ஏற்றுக் கொள்ள முடியாதபடி” உள்ளதாகவும், இந்தியாவை “வரிகளின் ராஜா” என்றும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்

இந்தியா அமெரிக்காவின் நம்பிக்கை நாடாக இருக்கிறது என்பதால்  எப்போது வேண்டுமானாலும் வரி விகிதத்தைக் குறைத்து கொள்ளும் என்ற நம்பிக்கை நிலவி வரும் நிலையில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வில்லை.

இந்தியா அமெரிக்காவிற்கு 17.1% வரி விதிப்பை விதித்திருந்தது. இது ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை காட்டிலும் கூடுதலான விகிதம் என்பதை பல வல்லுநர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் பதில்

உலக வர்த்தக நிறுவனத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவில் தான் இந்தியாவின் வரி விகிதம் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா – இந்தியாவிற்கு இது வரை அளித்து வந்த சிறப்பு வர்த்தக சலுகைகளை திரும்ப பெற்றுக் கொண்டதன் பின்னணியில் இந்தியப் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்குப் பின்பு இந்தியா தனது ஏற்றுமதி வரி விதிப்புகளில் சில பொருட்களுக்கான வரி விதிப்புகளை குறைத்து கொண்டது. ஆனாலும் பெரும் அளவில் வரி விதிப்பில் மாற்றங்களை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

நேரடியான வார்த்தை போரில் அமெரிக்கா ஈடுபட்டாலும் இந்தியா நட்பு நாடு வரிசையில் இருப்பதால் இந்த வரி விதிப்பு கொள்கைகள் பெரிய பாதிப்பினை இந்தியாவிற்கு கொண்டு வராது என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பு அளவுகளைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவே இரண்டு நாடுகளின் மத்தியிலும் நம்பிக்கை நிலவுகிறது.

ரத்தின கற்கள், மருத்துவ இயந்திரங்கள் மற்றும் கனிம எரிபொருட்கள் மற்றும் வாகனங்களை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இருசக்கர வாகனங்களுக்கு இந்தியா அதிகபடியான வரி வகிதத்தை விதிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்னிட்டு அதனைத் தற்போது குறைத்துக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப பொருட்களிலும் அதிக வரி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தகப் பரிமாற்றம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்தியா தனது பங்கிற்கு எஃகு, அலுமினியப் பொருட்களுக்கு வரி விகித குறைப்பை கோரியது. ஆனால் அமெரிக்கா அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது என்பதும் குறிப்பிடத் தக்க ஒன்று. மேலும் அமெரிக்கா, இந்தியாவுக்கு அளித்து வந்த சிறப்பு வரி விகிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டது என்பதும் பொருளாதார மட்டத்தில் இந்தியாவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே வல்லுநர்கள் கணிக்கின்றனர்.  

இந்தியாவிற்கு பாதிப்பு வருமா?

உலக அளவில் ஒரு போட்டி மனப்பான்மையையும், மூலதன நெருக்கடியையும் உருவாக்கி இருக்கும் இந்த வர்த்தக நிலைமை இந்தியாவை மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தற்போது அனைத்து நாடுகளும் உறுதி செய்துள்ளன. இந்தியாவில் ஏற்கனவே உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைந்து இருக்கிற இந்த சமயத்தில் இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது என்றும் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

வர்த்தகப்போரை இந்தியா எப்படி பயன்படுத்திக் கொள்வது?

பொருளாதார வல்லுநர் டி.எஸ். லம்போர்ட் சீனா – அமெரிக்கா இடையே இருக்கிற வர்த்தகப் போரில் அந்த இரு நாடுகளில் எவரும் வெற்றி அடைய போவதில்லை. இது உலக நாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கும்” என்று கணித்திருந்தார்.

உலக அளவில் பொருளாதார சுணக்கம் இருந்தாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் தனது பொருளாதார மந்த நிலைமையை மாற்றியமைக்க இது போன்ற ஒரு சூழல் பயன்படலாம். உலக நாடுகளில் மத்தியில் பொருளாதார தடை, வரி விதிப்பு போன்ற கொள்கைகள் குறித்து சந்தேகமான மனநிலை இருக்கும் போது இந்தியா தனது உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியினை உயர்த்தும் போது அதிகளவு பயனை பெற முடியும். இரு பெரும் வல்லரசுகளும் கடுமையான போரினைத் தொடங்கி இருக்கும்போது இந்தியா ஏற்றுமதியினை அதிகரித்து, பொருளாதார நிலைமையை வலுவானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதோடு இந்தியா வலுவான பொருளாதார கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் இருக்கும் போது இந்த வாய்ப்பினை நல்ல தருணமாகக் கருதுவதற்கு ஏற்ற அனைத்து சாத்தியங்களும் காணப்படுகின்றன.

சீனாவிடம் மிக நேர்த்தியான உள்கட்டமைப்பு வசதிகள் காணப்படுகின்ற நிலையில் பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்குச் சென்றாலும் அந்நாட்டில் பெரிய அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. மேலும் தொழில் பெருக்கத்திற்குத் தேவையான திட்ட மிட்ட நகர மயமாக்கல் சீனாவிடம் இருக்கிறது. தொழில் முனைவோருக்குக் கல்வி, மருத்துவம் இரண்டும் அவசியம். இவை இரண்டும் பெரும்பாலும் சீனாவில் அரசாங்கத்தின் வசம் இருப்பதால் அதன் வளர்ச்சி நிலைமைகள் உறுதியாகவே இருக்கிறது.

இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்கள் பல முன்னெடுக்கப் பட்டுள்ளன என்றாலும் உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியா இன்னும் முன்னேற்றத்தை அடைய வில்லை என்பது முக்கியமானது. கல்வி துறைகளில் பெருமளவிற்கு தனியார் துறைகளைச் சார்ந்திருப்பது ஒரு அசாதாரணமான சூழல்நிலைக்குத் தள்ளும் நிலையை உருவாக்கலாம். மேலும் தொழில் முனைவோருக்கான பல வாய்ப்புகளை இந்தியா தற்போது முன்னெடுத்தாலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இன்னும் மக்களை சென்றடைய வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்கு விக்குப்பதன் மூலம் தொழில் துறை முன்னேற்றங்களை அடைந்து ஏற்றுமதியை நோக்கி செயல்படலாம். உள்நாட்டு உற்பத்தி பெருக்கத்தினை மேம்படுத்துவதற்கு கடுமையான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய தேவையை இந்தியா தற்போது உணர்ந்திருக்கிறது.