தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்
- IndiaGlitz, [Tuesday,November 14 2017]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்
நவம்பர் 14 என்றாலே அனைவருக்கும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளும், குழந்தைகள் தினமும்தான் ஞாபகம் வரும். குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பருவம். எந்தவித கவலையும் இல்லாமல், எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல், பெற்றோர்களின் அரவணைப்பில் குதூகலமாக இருக்கும் பருவம். இந்த குழந்தை பருவத்தில் திரையுலகையும் கலக்கி வரும் குழந்தை நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
அஸ்வத்ராம் - நந்தலாலா
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'நந்தலாலா' படத்தில் மிக முக்கிய கேரக்டரான அகிலேஷ் என்ற கேரக்டரில் அஸ்வத்ராம் நடித்திருந்தார். இயக்குனர் மிஷ்கின் கிட்டத்தட்ட நூறு குழந்தை நட்சத்திரங்களை ஆடிஷனுக்கு வரவழைத்து அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர் தான் இந்த அஸ்வத்ராம். அதிக வசனங்கள் இல்லாமல் முகபாவங்களை மட்டுமே காட்டும் வகையில் அமைந்திருந்த இந்த கேரக்டரில் அஸ்வத்ராமை சிறப்பான முறையில் மிஷ்கின் கையாண்டார் என்பதே உண்மை
பேபி அங்கிதா - என்னை அறிந்தால்:
ஏற்கனவே ஒருசில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி அங்கிதா, தல அஜித் மகளாக 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய இஷா என்ற கேரக்டர் மிகவும் முக்கியமானது. இவரை காப்பாற்றுவதற்காக தான் அஜித் முக்கிய முடிவுகளை எடுப்பார். இந்த படத்திற்கு பின்னர் பேபி அங்கிதா, 'நானும் ரவுடிதான், மிருதம் போன்ற படங்களில் நடித்தார்
சாரா- தெய்வத்திருமகள்:
இயக்குனர் விஜய் நடித்த 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த சாராவின் நடிப்பு குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நடிகர் விக்ரமுக்கு இணையாக நடிப்பில் வெளுத்து வாங்கிய சாரா, இந்த படத்தில் 'நிலா' என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் விஜய்யின் 'சைவம்' படத்திலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பேபி சாதனா - தங்கமீன்கள்:
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் கதையே இவருடைய 'செல்லமா' என்ற கேரக்டரை சுற்றித்தான் வரும். அப்பா-மகள் பாசத்தை பொழியும் இந்த படம் சாதனாவின் மைல்கல் படம் என்று கூறினால் அது மிகையாகாது
நைனிகா - தெறி:
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகமானவர் நைனிகா. இவருடைய தாயார் மீனாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நைனிகா, நிவேதிதா என்ற கேரக்டரில் அறிமுக நட்சத்திரம் என்ற சுவடே தெரியாமல் மிக இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்
ரமேஷ் - காக்க முட்டை:
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'காக்க முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டாவது மகனாக குழந்தை மனம் மாறாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் ரமேஷ். இவருக்கும் இவருடன் நடித்த விக்னேஷுக்கும் இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
கவின் - பசங்க 2:
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தலும் அனைவரையும் கவர்ந்த ஒரு கேரக்டர் நிசேஷ் என்ற கேரக்டரில் நடித்திருந்த கவின். தனக்கு இருக்கும் மிகையான புத்திசாலித்தனத்தை பெற்றோர் புரிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை தனது நடிப்பால் மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் கவின்.
சாதன்யா - நிசப்தம்:
எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி பெற்றோர் முன் கூனிக்குறுகி நிற்கும் பரிதாபமான வேடம். ஆனால் இந்த கேரக்டரின் ஆழத்தை புரிந்து கொண்டு மிக இயல்பாக நடித்த சாதன்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. குறிப்பாக அப்பாவைக்கூட பார்க்க முடியாமல் உடல் முழுவதையும் போர்வைக்குள் அடைத்துக்கொள்ளும் காட்சி அனைவரையும் கண்ணீர் வரவழைக்கும்
ராஜமாணிக்கம் - மெர்சல்:
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் சிறுவயது வடிவேல் கேரக்டரில் நடித்தவர் தான் இந்த ராஜமாணிக்கம். 9ஆம் வகுப்பு படிக்கும் இவர் உண்மையிலேயே விஜய் ரசிகர் என்பதும், இவருடைய நடிப்பும் இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
அக்சத் - மெர்சல்:
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மெர்சல்' படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் தளபதி விஜய்க்கு மகனாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் அக்சத். குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருடைய கெட்டப், நடிப்பு ஆகியவை மனதில் நிற்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.