பசியின் கொடுமையால் மணலை சாப்பிட்ட குழந்தைகள்: ஒரே ஒரு வீடியோவில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

பசிக்கொடுமையால் குழந்தைகள் மணலை அள்ளி சாப்பிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியதை அடுத்து அந்த குழந்தைகளுக்கு தற்போது நல்வாழ்வு கிடைத்துள்ளது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவன் குடிகாரன் என்பதால் வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தது. எனவே தாயும் அவருடைய குழந்தைகளும் பசியால் வாடி உள்ளனர். அப்போது அவருடைய இரண்டு குழந்தைகள் பசியின் கொடுமையை தாங்க முடியாமல் மணலை அள்ளி சாப்பிட்டுள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனை அடுத்து திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் அந்த இடத்தை கண்டுபிடித்து சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணும் அவருடைய ஆறு குழந்தைகளும் பசியின் கொடுமையால் வாடி வருவதை கண்டுபிடித்தனர்

இதனையடுத்து அந்த பெண்ணிடம் பேசியபோது தனது மூன்று மாத குழந்தைக்கு பால் கொடுக்க கூட அவரால் முடியாததை கண்டு அதிர்ந்தனர். அதன்பின்னர் அந்த பெண்ணின் அனுமதியுடன் அவருடைய நான்கு குழந்தைகளை, குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க முடிவு செய்தனர்.

மீதியுள்ள இரண்டு குழந்தைகள் மூன்று மாதங்கள் மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள் என்பதால் தாயின் அரவணைப்பிலேயே இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். மேலும் அந்தப் பெண்ணின் நிரந்தர வருமானத்திற்கு வழி செய்யும் வகையில் அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வாங்கிக் கொடுத்தனர். அதன் பின்னர் அவர் கொடுத்த தகவலின்படி அவருடைய கணவரை கண்டுபிடித்து அவரை கண்டித்து குழந்தைகளையும் மனைவியையும் காப்பாற்றுமாறு அறிவுறுத்தினர்

இணையதளத்தில் வைரலான ஒரே ஒரு வீடியோவால் தற்போது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல முறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது