ஒரு குழந்தையை மாறிமாறி விற்பனை செய்த கும்பல்… போலீசாரே மிரண்டுபோன சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேலம் பகுதியில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையான ஆட்டோ டிரைவர் ஒருவர் 3 ஆவதாகப் பிறந்த பெண் குழந்தையை விலைக்கு விற்று இருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட அவரது மனைவி உடனே போலீசாரின் உதவியை நாடி இருக்கிறார். அந்த விசாரணையில் பல திடுக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சேலம் நெத்திமேடு அடுத்த கே.பி.கரடு எனும் பகுதியில் வசித்துவரும் ஆட்டோ டிரைவர் சங்கர் அவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதிக்கு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி 3 ஆவது பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினரிடம் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் எனக்கூறிய சங்கர் குழந்தையைத் தூக்கி சென்று இருக்கிறார். ஆனால் திரும்பி வரும்போது வெறுங்கையோடு வந்த சங்கரைப் பார்த்து மனைவி அரண்டு போய் இருக்கிறார். பின்புதான் தெரிந்து இருக்கிறது அவர் குழந்தையை விற்றுவிட்டு வந்திருக்கிறார் என்று.
இதனால் கலங்கிபோன சத்யா உடனே போலீஸ் உதவியை நாடி இருக்கிறார். அந்த விசாரணையில் சங்கர் முதலில் கே.பி.கரடு பகுதியைச் சார்ந்த கோமதி என்பவரிடம் குழந்தையை ரூ.1.15 லடசத்திற்கு விற்றது தெரியவந்து உள்ளது. அடுத்து கோமதி ஈரோட்டை சேர்ந்த நிஷா மற்றும் சித்ரா எனும் தரகருக்கு வாங்கிய விலைக்கே குழந்தையை கொடுத்து இருக்கிறார். இவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
பாலாமணி பெங்களூருவை சேர்ந்த ராஜேஸ்வரி எனும் இடைத்தரகருக்கு விற்பனை செய்து இருக்கிறார். அவரிடம் இருந்து கூடுதல் விலைக்கொடுத்து கீதா என்பவர் அந்த குழந்தையை வாங்கி இருக்கிறார். இந்த கீதா இறுதியில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த சுந்தர்ராஜன்- சசிகலா தம்பதிக்கு 4 லட்ச ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார். விசாரணையில் அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீஸ் குழந்தையை மீட்டு தாய் சத்யாவிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குழந்தையின் தந்தை மற்றும் 2 தரகர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout