குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்தவர்கள் லிஸ்டில் மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள்....!
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தையின் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகினறனர்.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகின. இணையதளம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாசப்படம் பதிவேற்றம் செய்வதும் பதிவிறக்கம் செய்து அதை பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தலைமையில் இதற்கான தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தைகள் ஆபாசப்படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்பவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக அனுப்பப்பட்டு பலரிடம் விசாரணை தொடங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் முதலில் கைதானார். அவர் முகநூல் கணக்கில் அவரை 300 பேர் பின் தொடர்ந்துள்ளனர். அவர்களின் முகவரி போலீசாரால் பெறப்பட்டு விசாரிக்கவுள்ளனர். மேலும் அந்த 300 பேரில் 15 பேர் மற்றவர்களுக்கு குழந்தைகள் ஆபாசப்படத்தினை பகிர்ந்துள்ளார்கள். இந்த 15 பேரை முதலில் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த 15 பேரில் மருத்துவர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் இருக்கின்றனர் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.