"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....!
- IndiaGlitz, [Friday,May 14 2021]
மதுரையில் இலவசமாக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளார்.
கொரோனாவின் கோரதாண்டவம் நாட்டையே உலுக்கி வரும் சூழலில், மக்கள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் கிடைக்காமல் போராடி வருகின்றனர். இக்கடுமையான நேரத்திலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் முன்வந்து, பொதுமக்களுக்கு மனதார சேவைகள் செய்து வருகின்றனர். பலரும் நிதி உதவி திரட்டி உணவு வழங்கியும், ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கியும் வருகின்றனர்.
அந்தவகையில் இப்படிப்பட்ட உன்னத மனிதர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் மதுரை, அனுப்பாடியைச் சேர்ந்த குருராஜ். கடந்த 10 வருடங்களாக மதுரையில் ஆட்டோ ஓட்டி வரும் இவர், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உடையவர். கொரோனா துவங்கிய காலத்திருந்தே மக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீர் வழங்குவது, காய்கறிகள் வாங்கி தருவது போன்ற இலவச சேவைகளை செய்து வந்தார்.
தற்போது தன்னுடைய ஆட்டோ சேவையையும் இலவசமாக மாற்றியுள்ளார். அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளையும், இதர நோயாளிகளையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார். பணம் செலுத்த முடியாத ஏழை மக்களிடமும், கட்டணம் வாங்காமல் இலவசமாகவே அழைத்துச் செல்கின்றார். குருராஜ் மட்டுமில்லாமல், இவரது நண்பர் அன்புநாதன் என்பவரும் இவருடன் இணைந்து இதுபோன்ற சேவைகளை செய்து வருகிறார்கள்.
குருராஜின் சேவைகள் குறித்து அறிந்துகொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆட்டோ டிரைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் கோவிட் தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.
இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது! நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம்
கொரோனா முதல் அலையின் போதும், தற்போது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் - பிற நோயாளிகளையும் மருத்துவமனைக்கு கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்று உயிர் காக்கும் உன்னதமானப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகளையும், ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச் செல்லும் தன்னார்வலராகத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது. தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதன் அவர்களும் பாராட்டுக்குரியவர். பேரிடர் காலம் எனும் போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.தாங்களும் குடும்பத்தினரும் நோய்த் தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் #COVID19 தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 13, 2021
இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது!
நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/xjXFKpqlD6