கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு… காணொலி வாயிலாகத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகளினால் தமிழர்களின் எழுத்தறிவு மற்றும் இருப்புக்கான காலம் கி.மு.4 க்கு முன்னதாக சென்றது. இதனால் கீழடியில் ஆய்வுகளை விரிவுப்படுத்த பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. ஆனால் கீழடியில் 3ஆம் கட்ட ஆய்வுப் பணிகளோடு மத்தியத் தொல்லியல் துறை நிறுத்திக் கொண்டது.
இதையடுத்து கீழடியில் அடுத்தக் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆம் கட்ட அகழாய்வில் 750 க்கும் மேற்பட்ட பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மேலும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் மட்டும் 3,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக தெல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தற்போது 7 ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது