பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சி நாடகமாடுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின் மீதான விவாதம் தற்போது தமிழகச் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக தவறான தகவல் பரப்பி வருகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால்தான் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், இவர்களின் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனது என்றும் நான் ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தி வருகிறேன் என்றும் தமிழக முதல்வர் தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் என்றும் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தமிழக முதல்வர் விளக்கம் அளித்து உள்ளார்.