மெரீனா வன்முறைக்கு விசாரணை கமிஷன். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்த முதல்வர்
- IndiaGlitz, [Wednesday,February 01 2017]
சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் கடைசி தினத்தில் நடந்த வன்முறையால் மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை நேற்று விடுதலை செய்வதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதுமட்டுமின்றி தவறு செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் உறுதி அளித்தார்.
நேற்று கொடுத்த உறுதிமொழியை இன்று முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மெரினா சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விசாரணை கமிஷனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
காவல்துறையினர்களின் அத்துமீறல் நடந்ததா? என்பது குறித்து இந்த விசாரணை கமிஷன் விசாரணை செய்து 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கமிஷன் பரிந்துரை அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.