கொரோனா வைரஸ் பீதி: முட்டை விலை படுவீழ்ச்சி
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
இந்தியா உள்பட உலகின் 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் அவசர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, மால்கள் தியேட்டர்கள் மூடப்படுவது உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வைரஸ் பீதி காரணமாக பங்குச்சந்தை முதல் உணவு பொருட்கள் வரை விலை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிக்கன் முலம் கொரோனா வைரஸ் பரவும் என்ற வதந்தி காரணமாக சிக்கன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வதந்தியை முறியடிக்க சிக்கன் மற்றும் முட்டைகள் இலவசமாக வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 5 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 3 ரூபாய்க்கும் குறைவாக வந்துள்ளதாகவும் கொரோனா பரபரப்பால் இன்னும் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கோழிக்கறி வாங்குபவர்களுக்கு முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்தாலும் உணவகங்களில் ஆம்லேட் ஆப்பாயில் விலை குறையவில்லை என்றும் வழக்கம்போல் அதிக விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முட்டை மற்றும் வெங்காய விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆம்லெட் விலையையும் உணவகங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை உணவகங்கள் பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.