இலங்கை தமிழர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு சேரன் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,August 26 2016]

நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுபவர்கள் ஒருசில இலங்கை தமிழர்கள்தான் என்றும், இலங்கை தமிழர்களுகாக திரையுலகம் பல போராட்டங்களை நடத்திய நிலையில் அவர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடலாமா? என்று இயக்குனர் சேரன் பேசியிருந்தார். சேரனின் இந்த பேச்சுக்கு இலங்கை தமிழர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது சேரன் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்... என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது....
இதுவரை திரையுலகில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது... ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை.. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா...
உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக் கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்...
ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்
இவ்வாறு சேரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.