விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன் உள்ளிருப்பு போராட்டம்

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பின்னர் உடனே பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் பதவியில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சங்கத்தின் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சேரன் சற்றுமுன்னர் விஷால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தயாரிப்பாளர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக கூறிய சேரன், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த எட்டு மாதங்களில் தனது வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்றும் வெறும் அறிக்கைகள், பேட்டிகள், சவால்கள் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதிலேயே கவனமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.