கொரோனா முடிந்தவுடன் இவரை கட்டிப்பிடிப்பேன்: இயக்குனர் சேரன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இயந்திரம் போல் இயங்கி வந்த மனிதர்கள் தற்போது முழு ஓய்வில் உள்ளனர். இதுநாள் வரை பிடித்த வேலை என்பதை மறந்து, கிடைத்த வேலையை செய்து வந்தவர்களுக்கு இந்த கொரோனா விடுமுறை அவர்களுடைய உண்மையான திறமையை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஒரு ஓவியர் மாட்டின் மீது ஒரு மனிதரின் படத்தை வரைந்துள்ளார். சரியாக மாட்டின் கழுத்தில் மனிதனின் முகமும் மாட்டின் கால்களில் மனிதனின் கால்களையும் அவர் வரைந்துள்ளதால் மாடு நடக்கும்போது அந்த ஓவிய மனிதனும் நடப்பது போல் உள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இயக்குனர் சேரன், ‘மிகவும் ரசித்த வீடியோ.. இந்த கிரியேட்டர் எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு கொரோனா முடிஞ்சதும் ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்... என்ன கற்பனை ... என்ன யூகம்... அழகு... என்று புகழ்ந்துள்ளார். சேரன் பதிவு செய்த இந்த வீடியோவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும் ஒருசிலர் மாட்டின் மீது பெயிண்ட் அடித்து ஓவியம் வரைந்ததால் மாட்டுக்கு அலர்ஜி ஏற்படும் என்றும் ஓவிய திறமையை காண்பிக்க மாடு தான் கிடைத்ததா? என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.