சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து. தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இந்த தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நியாயமாக தேர்தல் நடத்தும் சூழல் வந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்பட பல முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களில் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட ஆவணங்களூம் இருந்தன.

இதனையடுத்து நேற்றிரவு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, துணை தேர்தல் ஆணையர்கள், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா உட்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட முக்கிய கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.