Download App

Chennai2Singapore Review

சென்னை 2 சிங்கப்பூர்: திரைவிமர்சனம்  பாதியில் நின்ற ஜாலியான டூர்

கோலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய ஜிப்ரான் தயாரித்த முதல் படம், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியுள்ள இளைஞர் கூட்டத்தின் புதிய முயற்சி என்ற அளவில் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படம் ரசிகர்களை கவருமா? என்பதை பார்ப்போம்

சினிமாவில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி ஒரு தயாரிப்பாளருக்காக பத்து மாதங்கள் வேலை செய்கிறார் ஹரிஷ். ஆனால் திடீரென அந்த தயாரிப்பாளர் வேறு இயக்குனரிடம் படத்தை ஒப்படைத்துவிட்டதால் ஆத்திரமடைந்து தயாரிப்பாளரை அடித்து உதைக்கின்றார். பின்னர் ஒரு நண்பரின் உதவியால் சிங்கப்பூரில் உள்ள தயாரிப்பாளரை சந்திக்க செல்கிறார். ஆனால் இவர் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்த அதே வினாடியில் அந்த தயாரிப்பாளர் விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு செல்கிறார். இந்த நிலையில் கையில் இருந்த பாஸ்போர்ட், பணம் என அனைத்து தொலைத்துவிட்டு விரக்தியில் இருக்கும் ஹரிஷூக்கு சிங்கப்பூரில் விளம்பர படங்கள் எடுக்கும் கேமிராமேன் ஒருவர் அடைக்கலம் தருகிறார். அவருடைய உதவியுடன் ஒரு தயாரிப்பாளரை சந்திக்கின்றார் ஹரிஷ். ஹரிஷ் கூறிய கதை தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை, விண்ணை தாண்டி வருவாயோ போன்ற ஒரு நல்ல காதல் கதையுடன் வருமாறு அனுப்பிவிடுகிறார். இந்த நிலையில் தன்னை போன்றே விரக்தியில் இருக்கும் ரோஷினி என்ற பெண்ணை சந்திக்கும் ஹரிஷ், அவர் பின்தொடர்ந்து சென்றால் தனக்கு நல்ல காதல் கிடைக்கும் என்று நம்பி அவரை ஃபாலோ செய்கிறார். ஹரீஷுக்கு காதல் கதை கிடைத்ததா? படம் இயக்கினாரா? ரோஷினியின் விரக்திக்கு காரணம் என்ன? அதை தீர்த்து வைக்க ஹரிஷ் எடுக்கும் ரிஸ்க் என்ன என்பதே மீதிக்கதை

சாதிக்க வேண்டும் என்ற வெறி, தயாரிப்பாளர் ஏமாற்றிய பின் ஏற்படும் விரக்தி, ரோஷினியுடன் காதல், அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை தீர்க்க எடுக்கும் ஒரு ரிஸ்க் என படம் முழுவதும் ஹரிஷ் கேரக்டராக மாறியுள்ளார் புதுமுக நாயகன் கோகுல் ஆனந்த். காமெடி, சோகம் என இரண்டு வித நடிப்பிலும் தேறுகிறார். தமிழ் சினிமாவுக்கு நடிக்க தெரிந்த மேலும் ஒரு நல்ல ஹீரோ கிடைத்துவிட்டார் என்றே கூற வேண்டும்.

ரோஷினி கேரக்டரில் நடித்துள்ள நாயகி அஞ்சுகுரியனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் மனதை தொடும் கேரக்டர். சாவின் விளிம்பில் இருக்கும் தன்னை ஹரிஷ் காதலித்தால் அவனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் காதலை ஏற்க மறுக்கும் காட்சியில் அவரது நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது.

ஹீரோவின் நண்பராகவும் கேமிராமேன் கேரக்டரிலும் நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், உடல் மொழியும் சிரிப்பை வரவழைக்கின்றது. மற்றும் தயாரிப்பாளராக நடித்திருக்கும் மைக்கெல் கிரிஸ், அவரது அடியாளாக பாப்பா பலாஸ் ஆகியோர் நடிப்பும் ஓகே ரகம்

ஒரு முழு படத்திற்கும் ஐந்தாறு கேரக்டர்களை மட்டுமே வைத்து சலிப்பில்லாமல் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அப்பாஸ் அக்பரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் முதல் பாதி காமெடி மற்றும் சீரியஸ் என சரியான விகிதத்தில் கலந்து விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க காமெடி டிராக்கிற்கு மாறிவிடுகிறது. இரண்டாவது பாதி காமெடி காட்சிகளும் ஒருசிலவற்றை தவிர மற்ற காட்சிகள் ஏமாற்றத்தையே தருகிறது. முதல் பாதியின் சீரியஸ் விலகாமல் இரண்டாவது பாதியும் பயணித்திருந்தால் ஒரு மிகச்சிறந்த படமாக இருந்திருக்கும். குறிப்பாக சிங்கப்பூர் தயாரிப்பாளரின் ஆட்களால் நாயகி கடத்தப்பட்டவுடன் நாயகன் கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல் அப்போதும் காமெடி செய்து கொண்டிருப்பதும், அந்த காமெடி கடைசி வரை நீடிப்பதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு படம், ஒன்று ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸாக இருக்க வேண்டும், அல்லது காமெடியாக இருக்க வேண்டும். இரண்டையும் பாதிப்பாதி வைத்தால் சொதப்பிவிடும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள். படத்தின் முதுகெலும்பு என்று கூட கூறலாம். சிங்கப்பூர்ல பாஸ்போர்ட்டை தொலைப்பது, லேண்ட் ஆகப்போற விமானம் ஏர்போர்ட்டையே தொலைச்ச மாதிரி, தண்ணிக்குள்ள இருக்கும்போது மூச்சு மட்டும்தான் ஞாபகம் இருக்கும். அதை போல ஜெயிப்பது மட்டும் தான் ஞாபகம் இருக்கணும், சாகப்போற நேரத்துலதான் நல்லது செய்யணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. நல்லது செய்றதுக்கும் சாகிறதுக்கும் என்ன சம்பந்தம்?, நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், நமக்கு மேல் கஷ்டப்படறவன் இருக்கத்தான் செய்வான், போன்ற வசனங்கள் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்க டானிக்.

கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதில் சிங்கப்பூரின் குளுமையான காட்சிகள் கண்களுக்கு விருந்து. முதல் பாதி படத்திற்கு படத்தொகுப்பு மிக அருமை. இரண்டாவது பாதியில் எடிட்டர் பிரவீண் அவர்களுக்கு பெரிய வேலையே இல்லை என்றுதான் கூற வேண்டும்

ஜிப்ரானின் இசையில் படம் முழுவதும் ஆங்காங்கே சின்ன சின்ன பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த படத்தில் எத்தனை பாடல் என்று எண்ணுவதே சிரம்மதான். சொந்தப்படம் என்பதாலோ என்னவோ, அனைத்து பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் கம்போஸ் செய்துள்ளார். குறிப்பாக போகாதே பாடலின் இரண்டு வெர்ஷனும் மிக அருமை. அதேபோல் படம் முழுவதும் ஜாலியான மூடுக்கு தகுந்த பின்னணி இசை.

மொதத்தில் ஒரு நல்ல ஜாலியான டூர் பாதியில் முடிந்தால் ஏற்படும் ஏமாற்றம் தான் இந்த படம் முடிந்து வெளியே வரும்போது ஏற்படுகிறது.

Rating : 2.5 / 5.0