காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம்: சென்னை வாலிபர் பரிதாப மரணம்
- IndiaGlitz, [Tuesday,May 08 2018]
காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற திருமணி என்ற வாலிபர் சிக்கி பரிதாபமாக மரணம் அடைந்தார்.
சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி நேற்று மாலை பர்காம் மாவட்டத்தின் வழியே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்புப் படையினர்களின் வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்தக் கல்வீச்சுத் தாக்குதலின்போது அந்தவழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த திருமணியின் தலை மீது ஒரு கல் ஒன்று பட்டதால் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் திருமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சையின் பலனின்ரி அவர் பரிதாபமாக பலியானர்.
இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த திருமணியின் பெற்றோர் உடனடியாக காஷ்மீர் சென்றனர். திருமணியின் மரணச்செய்தி கேட்டறிந்த காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து, திருமணியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பிரேத பரிசோதனை முடிந்தபின்னர் திருமணியின் உடலை சென்னைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.
இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வரும் பர்காம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான உமர் அப்துல்லா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.