கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

விலை உயர்ந்த கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் ஒருவனை போலீசார் குறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற 12ஆம் வகுப்பு படித்த இளைஞன், தன்னுடைய பெற்றோரிடம் அடம்பிடித்து மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை வாங்கியுள்ளான். இந்த பைக்கின் மூலம் சட்டவிரோதமான பைக்ரேஸில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்ந்துள்ளான்.

இந்த நிலையில் ஒரு ரேஸின்போது நடந்த விபத்தால் தனது பைக் சேதமானதை அடுத்து மெக்கானிக் பிரித்விராஜ் யோசனையின்பேரில் கேடிஎம் பைக்குகளை திருடி அதில் இருந்து உதிரி பாகங்களை எடுத்து தனது பைக்கை ரிப்பேர் செய்துள்ளான். முதல் திருட்டில் சிக்காமல் இருந்ததால் அடுத்தடுத்து திருடும் எண்ணம் சந்தோஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பட்டினப்பாக்கம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் கேடிஎம் உள்பட விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் பிரித்விராஜ் மூலம் விற்பனை செய்து சொகுசாக வாழ்ந்துள்ளான்.

இந்த நிலையில் சிசிடிவி கேமிரா மூலம் சந்தோஷ்குமாரை அடையாளம் கண்ட போலீசார் அவனையும் அவனுக்கு உடந்தையாக இருந்த மெக்கானிக் பிரித்விராஜ் உள்பட ஐந்து பேர்களையும் கைது செய்தனர். சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசையுடன் பைக் கேட்டதால் மறுபேச்சில்லாமல் வாங்கி கொடுத்ததால், அவர்களே தங்கள் பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்கள் அவசியம் இருந்தால் மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், அவ்வப்போது தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.