சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தரும் மகிழ்ச்சியான செய்தி
- IndiaGlitz, [Tuesday,June 06 2017]
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வெயில் வாட்டி எடுத்தது. குறிப்பாக சென்னையில் தினமும் 100 டிகிரி செல்ஷியசை வெப்பம் தாண்டியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக கருதப்படுகிறது.
இதுகுறித்து வெதர்மேன் மேலும் கூறியதாவது: "காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையை வர்தா புயல் தாக்கி 6 மாதங்கள் ஆகிய நிலையில் சென்னையில் இந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
வெதர்மேன் அறிவித்த ஒருசில நிமிடங்களிலேயே சென்னையின் சில பகுதியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி நட்சத்திரம் முடிந்து பருவமழையும் நெருங்கிவிட்ட நிலையில் இனி வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் விடுதலை அடைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.