சென்னையில் நாளை எத்தனை மணி வரை கடைகள் திறந்திருக்கும்? தமிழக அரசு தகவல்
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரையிலும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி நேற்றுடன் சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் நாளையுடன் முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.
இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை ஒருநாள் மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்காமல் இருந்ததால் இந்த சலுகை என்றும், மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நாளை ஒருநாள் மாலை 5 மணி வரை பொருட்களை வாங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்பின்னர் நாளை மறுநாள் முதல் அதாவது மே 1ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை வழக்கம்போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.