கையெடுத்து கும்பிட்ட போலீஸ்: காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதனை ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளை பெரும்பாலானோர் கடைபிடித்தாலும் ஒரு சிலர் அத்தியாவசிய தேவை காரணமாகவும், அசட்டு தைரியம் காரணமாகவும் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவ்வாறு வெளியே வருபவர்களை போலீசார் எச்சரித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஸ்பென்சர் சிக்னல் அருகே இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் சாலையில் வாகனங்களில் வருபவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து வெளியே வர வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் தீவிரத்தையும் அபாயத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறார்.
போக்குவரத்து போலீசாரின் இந்த செய்கையை பார்த்து நெகிழ்ந்த ஒரு வாகனம் ஓட்டி உடனே அவருடைய காலில் விழுந்து இனிமேல் வெளியே வர மாட்டேன் என்று கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து போலீசார் இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறியதை அடுத்து அந்த போக்குவரத்து போலீசாருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்ட போக்குவரத்து காவலர் ?? pic.twitter.com/JRtafPMA9R
— IndiaGlitz - Tamil (@igtamil) March 25, 2020