தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய சென்னை ஆசிரியர்: பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,September 06 2020]
சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கொரோனா விடுமுறையில் நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு தாமிரபரணி ஆற்றில் திடீரென மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். கொரோனா விடுமுறையில் குடும்பத்துடன் நெல்லையில் உள்ள தனது சகோதரர் ரவி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நாராயணன் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் ரவி குடும்பத்தினர் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாராயணன் மற்றும் அவரது மனைவி அனுசுயா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் சுழலில் சிக்கிக் கொண்டனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிய அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தார்கள். இதில் நாராயணனின் மனைவி அனுசுயா மற்றும் மகன்கள் இருவர் ஆகியோர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். ஆனால் நாராயணன் தண்ணீரில் மூழ்கி விட்டார். அவரை காப்பாற்ற முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகின் மூலம் தாமிரபரணி ஆற்றில் சென்று பல மணி நேரம் தேடினர். இருப்பினும் நாராயணன் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை தேடும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா விடுமுறையில் ஆற்றில் குளிக்க சென்ற ஆசிரியர் திடீரென ஆற்றில் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.