KKR vs CSK யாருக்கு அதிக பலம்? 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு?
- IndiaGlitz, [Friday,October 15 2021] Sports News
14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இதில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியுடன் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதவுள்ளனர். இந்தப் போட்டியில் 4 ஆவது முறையாக சென்னை சிஎஸ்கே கப்பை வெல்லுமா என்ற பேரார்வத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே சென்னை சிஎஸ்கே அணி கடந்த 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 என 8 முறை ஐபிஎல் போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் இடம்பிடித்து இருக்கிறது. இதில் 2010, 2011, 2018 என மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை சென்னை சிஎஸ்கே தட்டிச்சென்றுள்ளது.
தற்போது நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெயிக்வாட் ஒரே தொடரில் 603 ரன்களைக் குவித்துள்ளார். இறுதிப்போட்டியில் மேலும் 26 ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்ததற்காக கே.எல்.ராகுல் பெற்றிருக்கும் ஆரஞ்ச் தொப்பியை இவர் தட்டிப் பறித்துவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சிஎஸ்கேவை பொறுத்தவரை கேப்டன் தோனி (40), டுவைன் பிராவோ (38), டூபிளசிஸ் (37), அம்பதி ராயுடு (36), ராபின் உத்தப்பா (36), மொயின் அலி (34), ரவீந்திர ஜடேஜா (32) என பெரிய பட்டாளமே அடங்கியிருக்கின்றனர். இந்த அனுபவசாலிகளின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்று ரசிகர்களும் காத்திருக்கின்றனர். மேலும் பந்து வீச்சை பொறுத்தவரைக்கும் ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குவர் என்ற பலம் வாய்ந்த கூட்டணி அமைந்திருக்கிறது.
இதற்குமாறாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2012, 2014 என இருமுறை ஐபிஎல் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இடம்பிடித்திருக்கிறது. ஆனால் தகுதிப்பெற்ற 2 முறையும் கொல்கத்தா அணியினர் வெற்றிவாகை சூடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் மோர்கன் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 7 போட்டிகளில் 5 முறை கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஆனால் சிஎஸ்கேவுடன் மோதிய இரண்டு முறையும் கொல்கத்தா தோல்வியை தழுவி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் தொடக்க ஆரட்டக்காரர்கள் வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஆகிய இருவரும் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். அதோடு கொல்கத்தா அணிக்கு பெரிய பக்கபலமாக வருண் சக்கரவர்த்தி, ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன் என 3 பவுலர்களும் அதிரடி காட்டி வருகின்றனர்.
எனவே ஐபிஎல் 2021 போட்டியை பொறுத்தவரை சிஎஸ்கே பெரிய அனுபவசாலிகளுடன் குறைவான பந்துவீச்சு திறமையை வைத்துக்கொண்டு மோத இருக்கிறது. ஏற்கனவே 2021 ஐபிஎல் லீக் போட்டியில் 2 முறை சென்னை சிஎஸ்கேவுடன் தோல்வியுற்ற கொல்கத்தா தற்போது சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்காக ஆக்ரோஷத்துடன் களம் இறங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.