சொந்த பிராண்ட்டை மிஞ்சிய சிஎஸ்கே… இந்தியாவில் முதல் வரலாற்று சாதனை!
- IndiaGlitz, [Tuesday,February 01 2022] Sports News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குச் சந்தை மூலதனம் அதன் சொந்த பிராண்ட் நிறுவனமான இந்தியா சிமெண்டை விடவும் அதிகமாகியிருக்கிறது. மேலும் இந்திய அளவில் அதிக வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் ஸ்போர்ஸ் நிறுவனங்களுள் ஒன்றாகவும் சிஎஸ்கே மாறியிருக்கிறது.
மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பட்டம் வென்றதைத் தொடர்ந்து அதன் பங்கு சந்தை மதிப்பீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபரில் ரூ.110-120 ஆக இருந்த சிஎஸ்கேவின் பங்குகள் தற்போது ரூ.210-225 ஆக உயர்ந்திருகின்றன. இதனால் சிஎஸ்கேவின் வர்த்தக மதிப்பு ரூ.6,869 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்டை விடவும் அதிகம் என்பதுதான் தற்போது பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க போன்ற நாடுகளில் தொழில் நிறுவனங்களின் பங்குகளை பிரிமியர் லீக் அணிகள் தொடக்கூட முடியாது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. காரணம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் அதிகரித்திருக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் நிறுவனங்களின் மதிப்புகளும் அதிகரித்தே காணப்படுகின்றன.
ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு போட்டிகளில் லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படியிருக்கும்போது சிஎஸ்கே அணியின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான என்.சீனிவாசன் “பிராண்ட் சிஎஸ்கே பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸை கடந்து விஞ்சி விட்டது“ எனக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். பிராண்ட் நிறுவனத்தை மிஞ்சி சிஎஸ்கேவிற்கு ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.