3000ஐ நெருங்கிவிட்ட ராயபுரம், 2000ஐ நெருங்கிய 2 மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் 500,600 என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 1000ஐ தாண்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை மக்கள் எந்தவித பயமும் இன்றி தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் சென்னை மாநகாரட்சி வெளியிட்டுள்ளது. இதில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் 3000ஐ நெருங்கிவிட்டது என்பதும் தண்டையார்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இரு மண்டலங்களும் 2000ஐ நெருங்கிவிட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 2935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில் 1867 பேர்களும், தண்டையார்பேடை மண்டலத்தில் 1839 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1770 பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 1651 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1341 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது.

மேலும் வளசரவாக்கம் மண்டலத்தில் 890 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 883 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 15,770 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.