சென்னை மின்வெட்டுக்கு தமிழக அரசின் கடன் பாக்கி காரணமா?
- IndiaGlitz, [Thursday,April 27 2017]
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நேற்று இரவு மின்சாரம் தடை பட்டதால் இருளில் மூழ்கியது. கோடை வெப்பத்தால் இரவு முழுவதும் புழுக்கத்தின் காரணமாக சென்னை மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இந்த மின் தடைக்கு 'உயர் மின் அழுத்தப் பாதையில் ஏற்பட்ட பழுதே காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி பாக்கித்தொகை செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின் தடை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை மின்துறை அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறியபோது, ''உயர் மின் அழுத்தப் பாதையில் பழுது ஏற்பட்டதால்தான் மின் தடை ஏற்பட்டது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டுவிட்டது. வடசென்னையில் காலை 4 மணி முதல் மின் விநியோகம் சீராக உள்ளது. மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய தொகைக்கும் மின்வெட்டுக்கும் சம்பந்தமில்லை', என்று கூறினார்.
நேற்றிரவு 8 மணி முதல், சென்னையின் முக்கியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், ராயப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, போட்ஸ் கிளப், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் வந்துவிட்டாலும் மயிலாப்பூர் உள்பட இன்னும் ஒருசில இடங்களில் இன்று பிற்பகலுக்குள் மின் விநியோகம் செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.