பாதுகாப்பு இன்றி நடந்த படப்பிடிப்பு: சென்னை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னை அருகே கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதுகாப்பின்றி நடந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள ஈசிஆர் சாலையில் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் ஆதாரத்துடன் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவானது. இந்த வீடியோவை பதிவு செய்தவர் முதலமைச்சர், சென்னை போலீஸ், சென்னை மாநகராட்சியின் டுவிட்டர் பக்கங்களுக்கு டேக் செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த ஒரு சில நிமிடங்களில் சென்னை காவல்துறை இதற்கு பதில் அளித்து உள்ளது. உங்களுடைய இந்த வீடியோவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சென்னை போலீஸ் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நேரத்தில் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் எந்தவிதமான விதிமுறைகளும் கடைபிடிக்காமல் படப்பிடிப்பு நடத்தி வருபவர்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடி நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.