தீரன் பட பாணியில் ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர்
- IndiaGlitz, [Wednesday,December 13 2017]
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்கிய மதுரவாயில் போலீசார், இந்த கொள்ளை சம்பவத்திற்கு வடமாநிலத்தை சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர்களே காரணம் என அங்கிருந்த சிசிடிவி கேமிரா மூலம் தெரியவந்தது
இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசாரின் தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. இந்த தனிப்படையில் சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி என்பவரும் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி ராஜஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை நகைக்கொள்ளையர்களின் கும்பலே சுட்டுக்கொலை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் எனவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை சேர்ந்த ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான தமிழக போலீஸ் ராஜஸ்தான் விரைந்துள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் சற்றுமுன்னர் அவர் பெரியபாண்டியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சமீபத்தில் வடமாநில கொள்ளையர்கள் குறித்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் வெளிவந்தது. தற்போது அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது