ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை: திடீரென தற்கொலை செய்த சென்னை நபர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பணக்காரர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றாலும் ஏழை எளிய மக்கள் மற்றும் அன்றாடம் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது

இந்த நிலையில் சென்னை ஆலந்தூர் பெரியபாளையத்தம்மன் தெருவைச் சேர்ந்த பக்ருதீன் என்ற 54 வயது நபர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இதனை அடுத்து தனது நண்பர் ஒருவரிடம் கடன் கேட்க ஆலந்தூரில் இருந்து தி.நகருக்கு கால்நடையாகவே நடந்து சென்றார்

ஆனால் அங்கு தனது நண்பரை சந்திக்க முடியாததால் மனமுடைந்த அவர் திடீரென அந்த பகுதியில் வந்த குப்பை லாரி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த பக்ருதீன் பின்னர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் குடும்ப பிரச்சனை காரணமாகவும், வறுமை காரணமாகவும் உயிரை மாற்றிக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்